
புடினுக்கு புதிய கெடுவை வழங்கிய ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், உக்ரைனில் நடைபெறும் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர புடினுக்கு 10 அல்லது 12 நாட்கள் கெடு வழங்கியுள்ளார். ஸ்காட்லாந்தில் பிரித்தனைய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பேசிய ட்ரம்ப், முன்பு நிர்ணயித்த 50 நாள் காலக்கெடுவை குறைத்து, இப்போது இந்த புதிய கால வரம்பை அறிவித்துள்ளார். "எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இப்போது நடவடிக்கைக்கு நேரம். பொருளாதாரத் தடைகள் அல்லது இறக்குமதித் தடைகள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். |
போரை 24 மணி நேரத்தில் முடிக்க முடியும் என அவர் தேர்தலுக்கு முன் கூறியிருந்தார். ஆனால், தற்போது அவர் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரையும் விமர்சிக்கிறார். "நாங்கள் பலமுறை இந்த பிரச்சினையை தீர்த்துவிட்டோம் என நினைத்தோம். ஆனால் புடின் மீண்டும் கீவ் போன்ற நகரங்களை தாக்கி பொதுமக்களை கொல்வதை தொடர்கிறார். இது சரியான வழி அல்ல," என ட்ரம்ப் கூறியுள்ளார். புடினுடன் கடந்த காலத்தில் உள்ள நல்ல உறவைப் பயன்படுத்தி சமாதானம் செய்வதற்கான முயற்சியில் ட்ரம்ப் தொடர்கிறார் என்றாலும், இது வரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. |