வட கொரியாவில் புதிய நோய் பரவல்

17.06.2022 08:50:50

வட கொரியாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து குடல் நோய் தோன்றியுள்ளதாக, அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வகை குடல் நோயால், மக்கள் காய்ச்சல், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக, வட கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே 'போதிய அளவு குடிநீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத வட கொரியாவில், அசுத்தமான குடிநீர் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவது சகஜம் தான்' என, அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா உட்பட எதையுமே வெளியுலகிற்கு சுலபத்தில் அறிவிக்காத வட கொரியா, புதிய குடல் நோய் குறித்து தெரிவித்திருப்பது விளம்பரத்திற்காகவே எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சொந்த மக்களின் சுகாதாரத்தில் தனக்கு உள்ள அக்கறையை உலகிற்கு காட்டவே, குடல் நோய் தகவலை பரப்பி, இலவச மருந்துகள் வழங்குவதை கிம் ஜங் உன் விளம்பரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.