மக்களை அடக்குவதற்காகப் புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சி!

26.10.2026 15:32:33

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அனுமதி வழங்கும் அரசாங்கம், மறுபுறம் மக்களை அடக்குவதற்காகப் புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்று சர்வஜன அதிகாரம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அக்கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அனுமதி வழங்கும் அரசாங்கம், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றது. குறிப்பாக, திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறையையும், மறுபுறம் மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் பயன்படுத்தப்படும் விதம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுபவர்கள் அச்சுறுத்தப்படும் நிலை உருவாகக்கூடாது. இவ்வாறான சட்டங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையையும் பாதிக்கக்கூடும்.

கூட்டாட்சிமுறை அல்லது சமஷ்டி தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவை. நாட்டின் அரசியலமைப்பு, தேசிய ஒற்றுமை மற்றும் பிரிவினைவாதம் தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கும்போது அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

அதேவேளை, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் மக்களைச் சட்டங்களின் மூலம் அடக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சுமார் 66 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றதாகக் கூறும் அரசாங்கம், மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க வேண்டும். பெறுமதி சேர் வரி, மருந்துகள் மற்றும் கல்வி உபகரணங்கள் மீதான வரிகள், மின்சாரக் கட்டணங்கள், எரிபொருள் விலைகள் ஆகியவை தொடர்பில் மக்களிடையே காணப்படும் அதிருப்திக்கும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் மரபுரிமை தொடர்பான விவகாரங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்களை அடக்குவதற்குப் பதிலாக, சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு ஒத்ததொரு சூழலை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே, புதிய சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே அமைய வேண்டும் என்றார்.