இன்று வருகிறது ஐஎம்எவ் குழு!
|
தித்வா' சூறாவளியை அடுத்து உருவான பேரனர்த்தத்தினால் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்கும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்குமென சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். |
|
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு இயக்குநர் சபையின் ஒப்புதலுக்காக கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் நாடு மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்ததை அடுத்து, துரித நிதியளிப்புத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் வேண்டுகோள்விடுத்தது. அதனையடுத்து இதுகுறித்து அறிவிப்பொன்றை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பணிப்பாளர் எவான் பபஜோர்ஜியோ, துரித நிதியளிப்புத்திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அவசர நிதியுதவிக் கோரிக்கைக்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வைப் பூர்த்திசெய்வது பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்கு 2026 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தமது அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகைதரும் எனவும் தெரிவித்திருந்தார். அதற்கமைய கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி வொஷிங்டனில் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை, 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவின் விளைவாக எழுந்திருக்கும் அவசரத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும், பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் துரித நிதியளிப்புத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 206 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களின் அளவு தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களையும், மதிப்பீட்டையும் மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினர் இன்றைய தினம் நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர். அத்தோடு இதனூடாகக் கண்டறியப்படும் விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணை அளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களில் உள்வாங்கப்படவுள்ளது. |