நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்; வாடகைக்கு விடப்படும் பிரதமர் பங்களா

04.08.2021 11:24:26

பாகிஸ்தான் பிரதமரின் பங்களா திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பாகிஸ்தான் பிரதமராக 2018ல் இம்ரான் கான் பதவியேற்றபோது 'பிரதமர், கவர்னர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் இனி அரசு சொகுசு பங்களாவில் வசிக்க மாட்டார்கள். சாதாரண வீடுகளில் தான் வசிப்பர். இதில் மீதமாகும் பணத்தை வைத்து மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என்றார். இதையடுத்து பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாதில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்து மூன்று அறைகள் அடங்கிய வீட்டில் குடியேறினர்.

இந்நிலையில் பிரதமரின் பங்களாவை பராமரிக்க அதிக பணம் செலவிட வேண்டியிருந்தது. இதனால் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பிரதமர் பங்களா வாடகைக்கு விடப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளது.இம்ரான் கானின் ராணுவ செயலர் வாசிம் இப்திகாரின் மகளின் திருமணம் பிரதமர் பங்களாவில் ஆடம்பரமாக நடந்தது. இதில் இம்ரானும் பங்கேற்றார்.இது பற்றி பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறுகையில் 'கடும் நெருக்கடியை சமாளிக்க பிரதமர் பங்களா கவர்னர் மாளிகை ஆகியவற்றை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றன.