மின் கட்டண பிரச்சனைக்கு இதுதான் தீர்வு.

23.07.2026 15:10:04

விஜய் ஆட்சியில், வீடுகளுக்கான மின் பயன்பாட்டைக் கணக்கிடுவதில் பெரும் முறைகேடுகளும் மெத்தனப் போக்கும் நிலவுவதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையான மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் புதிய தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, தற்போது பொதுமக்கள் மத்தியில் மின் கட்டணம் தொடர்பான ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நுகர்வோருக்கு வழக்கத்தை விட மிக அதிக அளவிலும், அநியாயமான முறையிலும் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகப் தவெக அரசு மீது மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

 

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கணக்கீடு மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகளில் பரவலாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகளே இந்த அளவுக்குக் கூடுதல் கட்டணம் வருவதற்கு முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது. பல வீடுகளில் மின்சாரப் பயன்பாடு குறைவாக இருந்தபோதிலும், கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட தவறுகளால் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வந்துள்ளதாகப் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தத் தவறான மற்றும் அதீத மின் கட்டணங்களால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்க நிரந்தரத் தீர்வு ஒன்றை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன் வைத்துள்ளார்.

மக்களின் அதிருப்தியைப் போக்குவது தவெக அரசின் கடமை நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக கூறுகையில், தமிழகத்தில் வீடுகளுக்கான மின் பயன்பாட்டைக் கணக்கிடுவதில் தொடர்ச்சியாக ஏற்படும் குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் அனைவரும் அதிக அளவிலான மின் கட்டணத்தைக்கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும், மக்களுக்குத் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது." மத்திய அரசு நாடு முழுவதும் ரூ.3,03,758 கோடி மதிப்பீட்டில் 'RDSS' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழக மின்சார வாரியத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசால் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 3 கோடி நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள், 4,72,500 விநியோக டிரான்ஸ்பார்மர் மீட்டர்கள், 8,274 ஃபீடர் மீட்டர்கள் ஆகியவற்றை நிறுவுவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.19,235.36 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டு முழுமையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ அனுமதி வழங்கி நிதியையும் ஒதுக்கியுள்ள நிலையில், தவெக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏன் தாமதம் காட்டுகிறது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தி.நகர் பகுதியில் மட்டும் இதுவரை வெறும் 1.28 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தாமல் தவெக அரசு தடுத்து நிறுத்துவது ஏன்? மத்திய அரசின் இந்த நன்மையான திட்டத்தின் பயன்கள் தமிழக மக்களுக்குச் சென்றடைவதைத் தவெக அரசு தடுக்கப் பார்க்கிறதா?" என்று அவர் மிகக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். நேரடியாக மனிதர்கள் வந்து கணக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், துல்லியமாகவும் தவறுகளற்ற முறையிலும் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடும் இந்த 'ஸ்மார்ட் மீட்டர்' முறையே தற்போதைய கட்டணக் குளறுபடிகளுக்கு முழுமையான மற்றும் ஒரே தீர்வாகும். மத்திய அரசின் நிதி உதவியுடன் கிடைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், மின் கட்டணப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், விஜய் தலைமையிலான அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநிலம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.