வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான காரணங்கள் இன்றும் நிலைத்துள்ளன!

14.05.2026 15:21:30

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 14.05.2026 அன்று 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதனையொட்டி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எமது கருத்துகளைப் பகிரந்து கொள்கிறோம்.

1976 மே 14 அன்று, தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் (TULF) தலைமையில் ஈழத் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டையில் ஒன்று கூடி வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அறிவித்தனர்.

அதில், “இந்த நாட்டில் தமிழ் த் தேசத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, ஒவ்வொரு தேசத்திற்கும் இயற்கையாக உள்ளதான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான, இறையாண்மையுடைய, மதச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீள நிறுவுவதும் மறுசீரமைப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது” என்று பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தத் தீர்மானம், தமிழ்த் தேசத்தின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அடைவதற்கான செயற் திட்டத்தை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி வகுக்க வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், தமிழீழத் தனிநாட்டை நிறுவும் போராட்டத்தில் தமிழ் மக்களும் குறிப்பாக இளைஞர்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவுக்கு, தமிழர் தேசத்தின் இறையாண்மையையும் விடுதலையையும் அடையும் போராட்டத்தை தாமதமின்றி முன்னெடுக்க செயல் திட்டம் வகுக்குமாறு மாநாடு பணித்தது.

வடுகோட்டைத் தீர்மானம் என்பது 1974இல் தொடங்கிய அரசியல் மாற்றப் பயணத்தின் தொடர்ச்சியான பரிணாமமாகும். 1974ஆம் ஆண்டு தந்தை செல்வா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, 1972 அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்கிறார்களா என்பதை மக்கள் தீர்ப்பாக மாற்ற இடைத்தேர்தலை கோரினார். சிறிலங்கா அரசு தேர்தலை தாமதப்படுத்தி 1975இல் நடத்தியது. அந்தத் தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெற்றார். வெற்றிக்குப் பின்னர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பின்வருமாறு கூறினார்.

“இந்தத் தேர்தல் தீர்ப்பை, தமிழீழ தேசம் தமக்குரிய இறையாண்மையை நடைமுறைப்படுத்தி சுதந்திரம் பெற வேண்டும் என்ற மக்களின் ஆணையாக நான் கருதுகிறேன். தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில், இந்த ஆணையை நாங்கள் நிறைவேற்றுவோம் என உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.”

வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் அரசியல் தொடக்கமாக அமைந்தது. இந்தத் தீர்மானம் கூட்டாட்சிக் கோரிக்கையைத் தாண்டி, தனித்த தமிழீழத்தின் அவசியத்தை வலியுறுத்தியது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பின்னர், தனிநாடு தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பதும் பகிர்வதும் குற்றமாக்கப்படும் வகையில் அவசரச் சட்டங்களை சிறிலங்கா அரசு கொண்டு வந்தது.

தமிழ் தலைவர்கள் அந்தச் சட்டத்துக்கு எதிராக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பகிரங்கமாகப் பகிர்ந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் தனிமைக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விசேடமாக அமைக்கப்பட்ட “Trial-at-Bar” எனும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த வழக்கில் 67 தமிழ் வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர். வழக்கறிஞர் திருச்செல்வம் வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்து, காலனித்துவ ஆட்சியாளர்கள் வெளியேறியபோது தமிழர்களின் இறையாண்மை மீண்டும் தமிழரிடமே திரும்பியது; மேலும் புதிய அரசியலமைப்பிற்கு தமிழர்கள் ஒப்புதல் அளிக்காததால், அந்த அரசியலமைப்பின் கீழ் இயங்கும் நீதிமன்றங்களுக்கு தமிழர்கள் மீது அதிகாரம் இல்லை என்று வாதிட்டார். நீதிமன்றம் இதை “அரசியல் கேள்வி” எனக் கூறி தீர்ப்பளிப்பதனைத் தவிர்த்தது.

வரலாற்றோட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக, அரசுக்காக அன்று ஆஜரான அன்றைய சட்ட மா அதிபர் பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியலமைப்பு விவகாரக் குழுவில் இணைந்து, இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (ISGA) வடிவமைப்பில் பங்காற்றியமை.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டிற்கான மக்கள் ஆணையை நாடி 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இத் தேர்தலில் தாங்கள் மக்கள் ஆணையை வென்றால் ஒரு அரசியல் நிர்ணயச் சபையை அமைப்போம் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர்.

ஆனால், அனைவரும் அறிந்ததுபோல், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அரசியல் நிர்ணய சபையை அமைக்கவில்லை. தமிழ் மக்களை அவர்கள் வாக்குறுதியளித்த இலக்கிற்குக் அழைத்துக் கொண்டு செல்லவுமில்லை.

அந்த மக்கள் ஆணையை இளைஞர்கள் தங்களுடைய பொறுப்பாக ஏற்றுக்கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அந்த ஆணையை நடைமுறைப்படுத்தி, ஒரு நடைமுறை அரசைக் (de facto state) கட்டியெழுப்பினர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் இருந்த அடிப்படைச் சூழ்நிலைகள், தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கான காரணங்கள் இன்று வரை தொடர்கின்றன.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசு ஆற்றிய எதிர்வினையின் தன்மையும் இன்றளவும் மாறவில்லை. 2009ஆம் ஆண்டு, அந்த அரசியல் மற்றும் இராணுவ அடக்குமுறை முல்லிவாய்க்கால் இனவழிப்பின் உச்சத்தை எட்டியது.

இன்று தாயகச் சூழல் காரணமாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக தாயக மக்கள் செயற்பட முடியாத நிலை உள்ளது. இதனால், அந்த வரலாற்றுப் பொறுப்பையும் மக்கள் ஆணையையும் தமிழ் புலம்பெயர் சமூகம் தன்னகத்தே தாங்கி நிற்கிறது. சர்வதேச நடைமுறைகள், சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில், அந்த மக்கள் ஆணையை ஜனநாயக ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கான உரிய கருவி மக்கள் வாக்கெடுப்பே (Referendum) என்று தமிழ் புலம்பெயர் சமூகம் நம்புகிறது.

அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட வரைவு தீர்மானங்கள், ஸ்கொட்லாந்து பாராளுமன்ற விவாதங்கள், தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம், வடமாகாண சபைத் தீர்மானம், மேலும் விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் — இவை அனைத்தும் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கு அதிகரித்து வரும் சர்வதேச அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றன.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நேரடியாக தமிழீழத்தை வலியுறுத்தியிருந்தாலும், இன்று பல்வேறு விருப்பங்களை உள்ளடக்கிய ஜனநாயக வாக்கெடுப்பு முறையின் மூலம் அந்த வரலாற்று ஆணையை முன்னெடுக்க வேண்டிய தேவையும் உருவாகியுள்ளது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அரசியல் இலக்கை அடைவதற்கான ஒரு தந்திரோபாய வழிமுறையாகவே நாம் மக்கள் வாக்கெடுப்பை முன்வைக்கிறோம். மக்கள் வாக்கெடுப்புக்காக நாம் முன்வைக்கும் திட்டத்தில் பன்மைத்துவம், இணைச்சேர்க்கை, ஜனநாயக உரிமைகள் போன்ற சுதந்திரவாதக் கொள்கைகள் இடம்பெற்றால், அது சர்வதேச சமூகத்தின் ஏற்புடமையை அதிகரிக்கும். வாய்ப்பைக் கொண்டிருக்கும். மேலும், சுயநிர்ணய உரிமையின் உண்மையான அரத்தமும் பல்வேறுவகையான அரசியற்தெரிவுகளுக்குள் மக்கள் தங்கள் அரசியற்தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் ஒரு முடிவை எடுக்கும் உரிமையையே வலியுறுத்துகிறது.. பல்வேறு தேர்வுகளை வழங்குவது, மாற்று அரசியல் தீர்வை விரும்புவோரையும் இந்த ஜனநாயக செயல்முறைக்குள் கொண்டு வந்து அதன் நம்பகத்தன்மையையும் சட்டபூர்வத்தன்மையையும் வலுப்படுத்தும்.

நாம் கவனத்திற. கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை என்னவெனில், சிங்கள அரசியல் மனோபாவத்தின் அடிப்படை இயல்பு இதுவரை மாற்றமடையவில்லை. சிறிலங்கா அரசு இறுக்கமான பௌத்த இனவாதக் கட்டமைப்பாக இறுகிப் போயுள்ளது. அமெரிக்க அரசியல் அறிஞர் டொனால்ட் ஹோரோவிட்ஸ் குறிப்பிட்டதுபோல், சிறிவங்காவின் ஆழமான இனவாத அரசியல் சூழல் உண்மையான அதிகாரப் பகிர்வை அனுமதிக்கப் போவதில்லை.

தற்போது தமிழ் அரசியல் வட்டாரங்களில் புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களை நாம் மதிக்கும் அதேவேளை வரலாறு தந்த பாடத்தின் அடிப்படையிலான எச்சரிக்கையையும் முன்வைக்க விரும்புகிறோம். இம் முயற்சிகள் பயனற்றவையாக அமையும் என்பது மட்டுமின்றி , ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இலக்கிற்கே பாதகமாக அமையக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

2009க்கு முன்னர், “விடுதலைப் புலிகள் இருப்பதால் அரசியல் தீர்வு சாத்தியமில்லை” என்று சர்வதேச சமூகம் கூறியது. இன்று “தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அரசியல் தீர்வு சாத்தியமில்லை” என்று கூறப்படுகிறது; அல்லது கூறப்படக் கூடிய நிலைமைகள் உள்ளன.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை என்ன, அவர்களது விருப்பு என்ன என்று யாரேனும் கேட்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக் காலத்தில் முன்வைத்த இடைக்கால நிர்வாக கட்டமைப்பு (ISGA) முன்மொழிவை தாயக அரசியற்கட்சிகள் எடுத்துக்காட்டாகக் காட்டலாம். இம் முன்மொழிவு குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியது போல் , “இம் முன்மொழிவை அப்படியே ஏற்கவோ இல்லையெனில் நிராகரிக்கவோ தேவையில்லை. இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.” என்பது இப்போதும் காலப்பொருத்தம் உடையது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 50 வருடங்கள் நிறைவடையும் இவ்வேளையில் இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள தேசங்களின் அரசியல் உருவாக்கமும் மேலும் வலுப்பெற்றுள்ளது. அதேசமயம் சிங்கள அரச ஒடுக்குமுறையும் இராணுவ அடக்குமுறையும் இக் காலகட்டத்தில் பெரிதும் தீவிரமடைந்திருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மான காலத்தில் சிறிலங்கா ஆயுதப்படைகளின் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக இருந்தது. இன்று அது பல இலட்சங்களாக உயர்ந்துள்ளது.

1977 ஆண்டின் மக்கள் ஆணையை முன்னெடுத்து செல்ல வேண்டுமெனில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி, ஒரு தமிழ் தேசிய பேரவையை (Tamil National Assembly) உருவாக்குவது பொருத்தமான அடுத்த கட்ட நடவடிக்கையாகும். இதனை எவ்வாறு செய்வது என்பது திட்டமிடப்பட வேண்டும்.

6வது திருத்தச் சட்டமும் தாயகத்தில் நிலவும் இராணுவ அடக்குமுறையையும் கருத்தில் கொண்டால், ஆரம்ப கட்டத்தில் அந்த அமைப்பை தமிழ் புலம்பெயர் சமூகமே உருவாக்க முடியும். பின்னர், சர்வதேச ஆதரவுடன் தாயகத் தமிழர்களும் அதில் இணைந்து பங்கேற்கக்கூடிய சூழல் உருவாக்கப்படலாம்.

வட்டுக்காட்டைத் தீ்ர்மானம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடையும் இக் காலப்பகுதியில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினையும், இறைமையையும் வென்றெடுப்பது குறித்து அர்த்தபூர்வமான உரையாடலில் ஈடுபட ஈழத் தாயகம், தமிழர் புலம் பெயர் நாடுகள், தமிழ்நாடு, உலகெங்கும் தபிழ் மக்கள் வாழும் நானுகளில் உள்ள அரசியல் அமைப்புகள், சமூக இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.