டிடிவி தினகரனுக்கு வரவேற்பளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்...!

31.07.2022 10:13:23

அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வரவேற்றனர். , தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான சையதுகான், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா மற்றும் டி.டிவி.தினகரனை தங்களுடன் இணைத்து கொள்வோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தேனியில் இன்று நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அந்த கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரனை, கணவாய் மலைப்பகுதியில் சையதுகான் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இவர் வரவேற்பு அளிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.கவின் தலைமை யார் என்பது குறித்து ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையே கடும் பனிப்போர் நடைபெற்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் சையதுகான் டி.டி.வி.தினகரனை சந்தித்த சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.