300க்கு மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது எப்படி?

20.10.2026 09:13:00

நீதிமன்ற தீர்ப்புகளுக்கு அப்பால் தான் எதையும் செய்யப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. அப்படியானால் 2025 மற்றும் 2026 பெப்ரவரி 4ஆம் திகதி 300க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு எந்த அடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார் என கேட்கிறோம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக இந்த நாட்டின் மகா சங்கத்தினர் காவி உடையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகவும் மிக அகிம்சை வழியிலான செயற்பாடொன்றை முன்னெடுத்து ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை விடுத்தனர்.

அதற்கு ஜனாதிபதியின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது என்பதை நாம் கண்டோம். பொலிஸார், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் தனது கட்சிக் காடர்களின் பலத்தைப் பயன்படுத்தி அந்த ஆர்ப்பாட்டங்களையும், அந்த அகிம்சை வழியிலான சத்யக்கிரகப் போராட்டங்களையும் கலைக்க அவர் முயன்றார். அதுமட்டுமின்றி, கொழும்பு மாநகர மேயரைக் பயன்படுத்திக்கொண்டு பொது வசதிகளான மலசலகூடங்களை மூடும் அளவிற்கு அரசாங்கம் மனிதாபிமானமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இனிமேல் இந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமானால், பெவத்தையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெவத்தைக்கு எத்தகைய பேரணிகளையும் நடத்தலாம்; பதுளையிலும் நடத்தலாம்; கொழும்பிலும் நடத்தலாம்; வீதிகளை முடக்கலாம்; எதை வேண்டுமானாலும் செய்யலாம். மற்றவர்களுக்குத் தங்களின் அமைப்புரிமை, எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை ஆகியவற்றுக்கு பெலத்தையின் அனுமதி அவசியமானதாக மாறியுள்ளது. இது மிக ஆபத்தான ஒரு போக்கு என்பதை நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொலிஸார், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சட்டம் - ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் அனைத்துப் பிரிவுகளையும் இந்த அரசாங்கம் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வருகிறது. இன்று அநுர குமார திசாநாயக்கவுக்கு தனது பொலிஸாரின், தனது புலனாய்வுப் பிரிவுகளின் சிறிய பதுங்குக்குழியொன்றை அமைத்துக் கொண்டு, அந்தப் பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டுதான் அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சி காலப்பகுதியில் மாத்திரம் மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டில் 560க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தியது எனக்கு நன்றாக ஞாபகமுள்ளது. அது பற்றிய பொலிஸ் பதிவுகள் உள்ளன. அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் வீதிகள் முடக்கப்பட்டன, பேரணிகள் சென்றன, பாராளுமன்றத்திற்குத் தீ வைக்க முயன்றனர். அந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்போதைய அரசாங்கம் இந்த முறையில் பொலிஸ் பலத்தைப் பயன்படுத்தவில்லை. மலசலகூடங்கள், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை நிறுத்தி அவற்றை அடக்க முற்படவில்லை. இதன் மூலம் இன்று அநுர குமார திசாநாயக்க தள்ளப்பட்டுள்ள நிலை என்ன என்பது தெளிவாகிறது.

அத்துடன் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு அப்பால் தான் எதையும் செய்யப் போவதில்லை என ஜனாதிபதி பதுளையில் தெரிவித்திருந்தார். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்; நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 285 பேரை 2025 பெப்ரவரி 04 திகதி ஜனாதிபதி அநுர குமார விடுதலை செய்தார். நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரை 2026 பெப்ரவரி 04ஆம் திகதி அன்று ஜனாதிபதி அநுர குமார விடுதலை செய்தார். அதன் விளைவாக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரை வீட்டுக்கு அனுப்பியது சட்டவிரோதமானது என்றும், இதனால் அவரது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அவர் தனது பதவியில் மீள அமர்த்தப்படவில்லை. அவரது பதவியைப் பறித்துக்கொள்ளும் நோக்கத்துடன் சில சிறைச்சாலை அதிகாரிகள் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்து வருவதாக, அண்மையில் ஞானசார தேரரைச் சந்தித்துவிட்டு வந்த சட்டத்தரணி தனது யூடியுப் பக்கத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே இது ஒரு கேலிக்கூத்தாகும். ஞானசார தேரருக்கு மட்டும்தான் நீதிமன்றச் சட்டம் பொருந்துமா? 2025இல் 285 பேர் விடுதலை செய்யப்படும்போதும், 2026இல் 49 பேர் விடுதலை செய்யப்படும்போதும் அந்தச் சட்டங்கள் ஜனாதிபதிக்கு பொருந்தவில்லையா என நாம் அவரிடம் கேட்கிறோம் என்றார்.