'ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை' .
ஈரானுடன் புதிய ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் குற்றச்செயல்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஈரானுடன் எங்களுக்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை” என ட்ரம்ப் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் ரேடார் கட்டமைப்பைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த பல வர்த்தகக் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கியுள்ளதுடன், சில கப்பல்கள் ஈரானிய இராணுவத்தின் தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா போரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ட்ரம்ப் கூறிவரும் நிலையில், இந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், ஈரானுடனான போர் எந்தத் திசையை நோக்கிச் செல்கின்றது என்பதுடன், ஊழல் மற்றும் குற்றச்செயல்களைக் கண்டறியும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வான்ஸ் நிர்வாகத்தில் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.