நகைச்சுவை நடிகரைபோல் செயற்படும் ரணில்
நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில்விக்ரமசிங்க நகைச்சுவை நடிகரைப் போல நடந்து கொள்வதாகக் குற்றஞ்சுமத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார, தேர்தலைக் காலந்தாழ்த்தும் நோக்கில் அரசியலமைப்புப் பேரவைக்கான நியமனங்களை துரிதப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.
அரசிலயமைப்புப் பேரவையின் நியமனங்களை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகிறது. துறைசார் மேற்பார்வை குழுக்களை நியமிக்க வேண்டுமென நாம் கடந்த 3 வருடங்களாகக் கூறிவருகிறோம். ஆனால், அதனை செய்யாது தேர்தலைக் காலந்தாழ்த்தும் வகையில் அரசியலமைப்புப் பேரவை நியமனங்களை அரசாங்கம் துரிதப்படுத்துகிறது.
தேர்தலைக் காலந்தாழ்த்தும் நோக்கம்
அரசியலமைப்பு பேரவைக்கு அதிபர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் சார்பில் ஒருவரை தெரிவு செய்யவேண்டியுள்ளது. பொருத்தமான நபர்களை தெரிவு செய்து அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பவில்லை என்றால் கடும்பிரச்சினைகள் ஏற்படும்.
இதேவேளை, தேர்தலைக் காலந்தாழ்த்தும் நோக்கில் அரசியலமைப்புப் பேரவை நியமனங்களை அதிபர் துரிதப்படுத்துவாராக இருந்தால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.
டயானாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் ரணில்
மேலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நகைச்சுவை நடிகரைப் போல செயற்படுகிறார். முஜிபூர் ரஹ்மான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆற்றிய உரைக்கு பதில்வழங்காது, டயானா எம்.பி தொடர்பில் அதிபர் விளக்கமளிக்கிறார். டயானாவைத் தூய்மைப்படுத்தும் வேலைகளை அதிபர் செய்கிறார்.
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கமுடியாது. இதற்காகவே 21ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறான நிலையில் இலங்கைக் குடியுரிமை கொண்டிராத ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் சபாநாயகர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.