
பயமுறுத்துவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை!
10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு அழைத்து செல்லும் அளவுக்கு தேவை இருக்கவில்லை. இது அரசியல் பழிவாங்களில் ஒரு பகுதியாகும். அச்சுறுத்தி ஆட்சி செய்வதற்காக மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை.அரசாங்கம் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.அதிகாரத்தை கவனமாக கையாள வேண்டும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். |
2014 ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி இன்று வியாழக்கிழமை (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுக்கக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் தனது கைது நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். எம் மீது வழக்கு தொடர்ந்தமை தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் 10 வருடங்களுக்கு பிறகு இரவு வீட்டுக்குள் புகுந்து என்னை சி.ஐ.டிக்கு அழைத்து செல்லும் அளவுக்கு தேவைப்பாடு இருக்கவில்லை. அழைப்பு விடுத்திருந்தால் நானே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருப்பேன். அரசாங்கத்திடம் எப்போதும் ஜனநாயகம் தொடர்பான கோட்பாடு இருக்க வேண்டும்.அது அற்று போகும் போது அங்கு சர்வாதிகாரம் தோற்றம் பெறும். இந்த கைது திட்டமிட்டு வேண்டுமென்றே இடம்பெற்றுள்ளது.அந்தக் காலப்பகுதியில் எமக்கு கிடைக்கப்பெற்ற நிதியை உரிய முறையில் மக்களுக்கு பகிர்ந்தளித்தோம்.அதற்காக அரச அதிகாரிகளை பயன்படுத்தினோம். எனது வாழ்நாளில் அரச சொத்துக்களை எனது தனிப்பட்ட தேவைக்காக தவறான வழியில் பயன் படுத்தியது கிடையாது. அதற்கான தேவையும் எனக்கு இருக்கவில்லை.இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசியல் பழிவாங்களில் ஒரு பகுதியாகும்.இது 2015 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.அதன் மற்றுமொரு கட்டமே இதுவாகும். எனினும் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக செயல்படுகிறது என்பதை கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அச்சுறுத்தல் விடுப்பதற்காகவோ அல்லது பயமுறுத்துவதற்காவோ மக்கள் உங்களுக்கு ஆணை வழங்கவில்லை. நியாயமான முறையில் ஆட்சி செய்யுங்கள்.இதனை விட உச்ச அதிகாரத்தில் இருந்தவர்களை நாம் பார்த்துள்ளோம். அவர்கள் பின் கதவால் தப்பியோடியதையும் பார்த்துள்ளோம்.எனவே அரசியல் அதிகாரத்தை மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள் என்றார். |