தலைமைத்துவ பின்னடைவு - லிஸ் ட்ரஸ்

18.10.2022 18:32:39

பிரித்தானியாவின் அடுத்த பொதுத் தேர்தல் வரை ஆளும் கென்சவேட்டிவ் கட்சியை தாம் தலைமை தாங்குவேன் என பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

சந்தை நிலைமைகளை ஸ்திரப்படுத்தும் வகையில் புதிய நிதி அமைச்சர் ஜெரமி ஹண்டினால் வரிக் குறைப்பு திட்டங்கள் மீளெடுக்கப்பட்டமை தொடர்பில் லிஸ் ட்ரஸ் மன்னிப்பும் கோரியுள்ளார்.

வரிக்குறைப்பு திட்டங்கள்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்ற பின்னர் அறிவிக்கப்பட்ட பல்வேறு வரிக்குறைப்பு திட்டங்களை அவரது அரசாங்கம் மீளெடுத்துள்ள நிலையில், அதிகாரத்தை தக்க வைப்பதில் லிஸ் ட்ரஸ் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து லிஸ் ட்ரஸ் விலக வேண்டும் என ஆளும் கென்சவேட்டிவ் கட்சியில் உள்ளவர்கள் மாத்திரமல்லாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கூட்டாக வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் அடுத்த பொதுத் தேர்தல் வரை தாமே பிரதமராக தொடர்வேன் என கூறியுள்ள லிஸ் ட்ரஸ், தமது தலைமைத்துவம் நிறைவான ஒன்றாக இல்லாத போதிலும் தவறுகளை திருத்திக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

செல்லும் பாதையை மாற்றாத பட்சத்தில் அது பொறுப்பற்ற செயற்பாடாகவே அமையும் எனவும் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.

தலைமைத்துவ பின்னடைவு

எனினும் இந்த இலக்கை எட்டுவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பதை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். தொலைநோக்குடன் சிந்தித்து செயலாற்றுவதாகவும் அதனை வித்தியாசமான வழிமுறைகள் ஊடாக நடைமுறைப்படுத்துவதாகவும் லிஸ் ட்ரஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய நிதி அமைச்சர் ஜெரமி ஹண்டினால் பெரும்பாலான வரிக் குறைப்பு திட்டங்கள் மீளெடுக்கப்பட்டுள்ளதை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

எனினும் தலைமைத்துவத்திற்கான பிரசாரத்தின் போது லிஸ் ட்ரஸ் உறுதி அளித்த விடயங்களை நிறைவேற்றுவதில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.