
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது?
செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது.
ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான்.
செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது.
கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது.
இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு.
நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான்.
இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ?
இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள்.
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள்.
நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம்.அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது.
வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம்.
2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது.
அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.
எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது.
இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது.
எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும்.
இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ?