அரசாங்கத்தை வீழ்த்த முடியாது,மக்கள் எம்முடன் உள்ளனர்!

04.12.2025 09:23:07

எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்கள் கீழ்த்தரமான அரசியல் இலாபத்துக்காக செயற்படுகிறார்கள். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். ஏற்பட்ட அனர்த்த நிலையின் பாதிப்பில் இருந்து வெகுவிரைவில் மீண்டெழுவோம். அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. மக்கள் எம்முடன் உள்ளார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த நிலைமையில் நாங்கள் சில அடிப்படை ரீதியிலான திட்டங்களை முன்னெடுக்கின்றோம். அவசர முன்னுரிமை, தற்காலிக தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு என்று விடயங்களாக அவற்றை முன்னெடுக்கவுள்ளோம்.அதன்படி அவசர நிலைமை மற்றும் தற்காலிக தீர்வுகள் தொடர்பிலேயே முதல்கட்டமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். நாட்டை மீளக் கட்டியெழுப்புதல் என்பது நிரந்தர தீர்வாக இருக்கும்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்கள் இருக்கின்றன. இந்நிலையில் வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் யாழ் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதிப்புகள் அங்கு மிகவும் குறைவாகும். கிளிநொச்சியில் சில பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. வவுனியாவில் சில பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால் மன்னார் மற்றும் முல்லைத்தீவு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நாயாறு பாலம் சேதமடைந்துள்ளது. டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அதனை சீரமைக்கும் பணிகளை முன்னெடுப்போம். எமது தன்னார்வ குழு உள்ளிட்ட சகல தரப்பினரும் வடக்கில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அரசாங்கம் அவசர வேலைத்திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. வீடுகளை சுத்தம் செய்வதற்காக 25000 ரூபா கொடுப்பனவு வழங்குகின்றது. பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 25000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எப்போதும் முகாம்களில் தங்கியிருப்பதற்கு விரும்புவதில்லை. கட்டிட ஆய்வு குழுவினர் அவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலைமையில் போக்குவரத்து, வீதிகள் மற்றும் தொலைத்தொடர்புகளை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது இலங்கை போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

நாங்கள் முறையாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். கஸ்டமான விடயங்களை முன்னெடுக்கின்றோம். எங்கள் முன்னால் எவரும் சரியானவராக அன்றி மக்கள் முன்னால் சரியானவர்களாக இருக்க வேண்டும். உள்ளூராட்சி தலைவர்கள் எங்களுக்கு நன்றாக உதவுகின்றனர். வடக்கிலும் பிரதேச சபை தலைவர்கள் உதவுகின்றனர். இந்த சவாலை எங்களால் வெற்றிக்கொள்ள முடியும்.

இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்கள் கீழ்த்தரமான அரசியல் இலாபத்துக்காக செயற்படுகிறார்கள்.அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். ஏற்பட்ட அனர்த்த நிலையின் பாதிப்பில் இருந்து வெகுவிரைவில் மீண்டெழுவோம்.அரசாங்கத்தை வீழ்த்த முடியாது.மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்றார்.