மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி!

10.08.2025 10:37:59

மாகாண சபை தேர்தல் முறைமையை, அரசாங்கம் இழுத்தடிப்பது என்பது ஒரு சதி திட்டமாகவே தாம் பார்ப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துறைரெட்னம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்குரிய முழு பொறுப்பும், இலங்கை அரசாங்கத்தின் கையில் இருக்கின்றது.

சின்ன சின்ன விடயங்களுக்கு எல்லாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிரூபித்து சட்டவாக்கம் செய்கின்றது.

அதேநேரம், அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமை தொடர்பான விடயத்தில் தேர்தல் முறைமையை இழுத்தடிப்பது என்பது ஒரு சதி திட்டம் கருத முடியும்.

எதிர் காலங்களில் இன மோதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், சகோதர உறவுகளை பேணி பாதுகாப்பதற்கும் ஜனநாயக சூழலை உருவாக்குவதற்கும் கருத்துக்களை கருத்துக்களால் வெல்லப்படும் விடயங்களை அமுல்படுத்துவதற்கும் சட்ட ஒழுங்குகளை அமுலாக்குவதற்கும் நாவடக்கம் என்பது அவசியமாகும்.

கருத்து சுதந்திரத்தை கொண்டு வௌியிடப்படும் கருத்துக்களால், பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமே தவிர, பிரச்சனைகள் வளர்வதற்கு நாங்கள் வழி கோழியாக அமைந்துவிடக் கூடாது எல்லை நிர்ணய குழு சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கைகளை பெற்று மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக பல ஏற்பாடுகள் நடைபெற்றன.

2025 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், புதிய அரசாங்கம் மாகாண சபை தேர்தலை இந்த வருடம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக இழுத்தடிப்பு செய்கின்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன.

இந்த மாகாண சபை முறைமை தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பது வடக்கு கிழக்கு மக்களது பெரும் ஆவலாக இருக்கின்றது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் வேண்டுமென்றே இழுத்தடிப்பை செய்வதை போல் தோன்றுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துறைரெட்னம் குறிப்பிட்டுள்ளார்.