முழுப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்த முயற்சி!

03.06.2026 08:50:15

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, இதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்தச் சில தரப்பினர் முயற்சிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து, அப்பீடத்தின் மாணவர் ஒன்றியம் 2026 ஜூன் 02 ஆம் திகதியிடப்பட்ட விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வெசாக் கொண்டாட்ட நிகழ்வானது, மாணவர் ஒன்றியத்தின் முழுமையான அனுமதி மற்றும் ஆதரவுடனேயே நடத்தப்பட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மத மற்றும் கலாசார நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கும், அதற்குரிய சிறந்த சூழலை உருவாக்குவதற்கும் தமிழ் மாணவர்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் உதவிகளையும் மனப்பூர்வமாக வழங்கியிருந்ததாக ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய விசாரணைகளுக்கு உட்பட்டுள்ள சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, சில தனிநபர்களினால் ஒரு வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளதாக ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

"பொதுச் சொத்துக்களை அழிக்கும் இவ்வாறான நாசகாரச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிராக முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீது பழிசுமத்த எடுக்கப்படும் முயற்சிகளைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் நியாயமற்றவை மற்றும் உண்மையான சூழ்நிலையைப் பிரதிபலிக்காதவை ஆகும்.

சொத்துக்கள் அழிக்கப்படுவதை எதிர்ப்பதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்கும் அதேவேளையில், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தை ஒரு 'இனப் பிரச்சினையாக' மாற்றுவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் சமமாக நிராகரிப்பதாக ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்புவதைத் தவிர்த்து, அனைத்து மாணவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.