தடுப்பூசி பெறாதவர்களுக்கு இனி இதற்கெல்லாம் அனுமதி கிடையாது...

03.12.2021 10:01:03

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு தடைகள் பல விதிக்கப்பட உள்ளன.

அதன்படி, இனி தடுப்பூசி பெறாதவர்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், கலாசார மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படும் என ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மட்டுமே இனி மேற்கூறப்பட்ட இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் விவாதம் துவக்கப்பட உள்ளதுடன், அதை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் சட்டமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மெர்க்கல் தெரிவித்தார்.

ஏற்கனவே, ஜேர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியா பிப்ரவரி முதல் கொரோனா தடுப்பூசியை கட்டயாமாக்க உள்ளதுடன், கிரீஸும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோக, ஜேர்மனியில் மேலும் பல கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளன.

அவையாவன,

  1. தடுப்பூசி பெறாத இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களிலானாலும், தனிப்பட்ட இடங்களிலானாலும் சந்தித்துக்கொண்டால், அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே சந்தித்துக்கொள்ள அனுமதி.
     
  2. அதிக கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் இரவு விடுதிகள் மூடப்படும்
     
  3.  பள்ளி மாணவமாணவியர் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும்
     
  4.  திறந்தவெளி விளையாட்டுக்களைக் காண, மைதானத்தில் அதிகபட்சம் 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி
     
  5. புத்தாண்டுக்கான பட்டாசு விற்பனைகளுக்குத் தடை.

இந்த கட்டுப்பாடுகள் எப்போது அமுல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆனால், அவை கிறிஸ்துமஸ் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிரது.

ஜேர்மனியில் ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பதைக் காட்டும் எண் சற்றே குறைந்துள்ளது என்றாலும், அது நேற்றைய நிலவரப்படி 439.2 ஆகத்தான் உள்ளது.