காங்கிரஸ் கட்சியுடன் தவெக பேசி வருகிறதா?

27.02.2026 14:49:50

தவெக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, நல்லதே நடக்கும் என்று செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தவெக விரும்புவதாக கிரிஷ் சோடங்கர் கூறி இருந்த சூழலில், இரு கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் முன் வைக்கும் நிபந்தனைகள் எதையும் திமுக சிறிதளவும் கண்டு கொள்ளவில்லை.

 

முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தரப்பில் 39 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரிக்கை திமுக தலைமையிடம் வைக்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு சரிவராது என்று கூறிவிட்டார். இதையடுத்து 39 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பேசி வந்தது. ஆனால் திமுக பேச்சுவார்த்தைக் குழு மற்றும் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் 25 தொகுதிகளுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதன்பின் காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் மற்றும் கனிமொழி இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

அந்த சந்திப்பின் போது உள்ளாட்சியில் அதிக இடங்கள் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையும் திமுக நிராகரித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக உள்ளது. ஒரு அரசியல் கட்சி எல்லோருடனும் பேசத்தான் வேண்டும். எந்தக் கட்சிதான் அதிகாரத்திற்கு ஆசைப்படாது என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே காங்கிரஸ் - தவெக இடையிலான பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய அளவிலான இரு பொறுப்பாளர்கள் விஜய் தரப்புடன் கூட்டணி மற்றும் தொகுதி எண்ணிக்கையை பேசி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் விஜய்யை காட்டி காங்கிரஸ் கட்சி தொகுதி எண்ணிக்கை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தியது திமுக தலைமையை சீண்டியதாக கருதுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து போனால் போகட்டும் என்று திமுக தலைமை முடிவு எடுத்துவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தவெக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செங்கோட்டையன், தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் எத்தனை பேர் எங்களை தேடி வருகிறார்கள் என்பதை காண்பீர்கள். எனக்கு தவெகவில் என்ன மரியாதை கிடைக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். மற்றவர்கள் உதாரணம் காட்ட தேவையில்லை. தவெக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் நல்லதே நடக்கும். தவெகவை பொறுத்தவரை சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார். ஸ்டாலின் பிறந்தநாளுக்கும் திமுக தலைமை கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க தயாராகி வருகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்விக்கு விடை தெரிந்துவிடும்.