ஜெனிவாவில் பகிரங்க கோரிக்கை!

10.09.2022 13:48:26

இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளும், ஒத்துழைப்புக்களும் கட்டாயம் தேவை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நெருக்கமாகச் செயற்பட முடியாது என்று தெரிவிக்கப்படும் கருத்துடன் தான் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசாங்க குழுவிலுள்ள முக்கியஸ்தரான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓர் ஒழுங்குமுறையில் தீர்வுகளைக் காணும் பணியை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும், அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்வு

மேலும் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நல்ல தீர்வு முன்வைக்கப்படும். அந்தக் கைதிகளில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உத்தரவாதம் அளித்த ரணில்

அத்துடன் காணி விடயம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் அதிபர் நடத்திய பேச்சின் போது இதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.