அமெரிக்கா – கனடா வர்த்தகப் போர்.

19.08.2025 08:06:13

கனடா தனது உள்நாட்டு பால் பண்ணைத் துறையை பாதுகாக்க, விநியோக மேலாண்மை அமைப்பு (Supply Management System) என்ற முறையின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

இந்த அமைப்பின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கு கனடா அதிக வரி விதிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் இந்த வரி 300% வரை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கனடா இறக்குமதி செய்யும் பால் பொருட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால்  அமெரிக்க விவசாயிகள் தயாரிக்கும் சீஸ், பால்மா போன்றவை அங்கு விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பால் உற்பத்திப் பொருட்கள் பண்ணைகளிலேயே குவிந்து கிடப்பதால்  பல பில்லியன் டொலர் மதிப்புள்ள பால் பொருட்களை வீணாக கொட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடாவின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா–மெக்சிகோ–கனடா ஒப்பந்தம் (USMCA) விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, அமெரிக்க தலைவர்கள் கனடாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வர்த்தகப் போர் எதிர்காலத்தில் அமெரிக்க பால் உற்பத்தி மாநிலங்களான விஸ்கான்சின் போன்ற பிராந்தியங்களின் விவசாயிகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையில் இந்த வர்த்தகக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது