சுமந்திரனின் பித்தலாட்டம் மக்களுக்குத் தெரியும்!
ஏக்கிய ராஜ்ஜியவில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
|
யாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் என்கின்ற நபர் யார் என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். நல்லாட்சி அரசாங்கத்தில் ஐ.நாவில் கால அவகாசம் பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தர் தலைமையிலான அணியில் சுமந்திரன் அரசாங்கத்தை காப்பாற்றினார். அது மட்டுமல்லாது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குகிறோம் எனக் கூறிக் கொண்டு ஏக்கிய ராஜ்ஜியவில் சமஸ்டி இருக்கிறது என மக்களுக்கு பொய்களை கூறி வந்தவர். அதே போன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை திசை திருப்பி இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்புக்கு தமிழ் மக்கள் உள்ளக விசாரணையை வலியுறுத்தி போராட்டம் செய்தார்கள் என பாராளுமன்றத்தில் தெரிவித்தவர். அப்போது எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டார், எமது போராட்டம் சர்வதேச விசாரணையை கோரி இடம் பெற்றதே அல்லாமல் உள்ளக விசாரணையை கோரி இடம் பெறவில்லை என அழுத்தம் திருத்தமாக கூறினார். இந்த விடயம் இந்த போராட்டத்தில் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்த வேலன் சுவாமியிடம் நாங்கள் தெரிவித்த போது சுமந்திரன் இவ்வாறாக பேசினாரா என கோபப்பட்டார். ஆனால் ஊடக சந்திப்பில் சுமந்திரன் கூறிய விடயங்களை மறுத்துப் பேச தயங்கிவிட்டார். இவ்வாறு பொய்களை உரைத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வினை கேட்கும் நிலையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்ட சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசு ஆதரவு வழங்குவதாக சுமந்திரன் அறிவித்திருக்கிறார். தமிழ் மக்களிடம் சமஸ்டித் தீர்வை முன் வைப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை ஆட்சி சிங்கள வேட்பாளருக்கு ஆதரவை வழங்கியமை ஒட்டு மொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு என பொது வெளியில் கூறிக் கொண்டாலும் பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் நீங்கள் தமிழ் மக்களை நேசிப்பவர்களாக இருந்தால் தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்படுபவர்களை உதறிவிட்டு தனித்து பாராளுமன்றத்தில் இயங்காதது ஏன் எனக் கேட்க விரும்புகிறேன். தமிழ் மக்களை ஏமாற்றி சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். இந்த ஏமாற்றத்தின் ஒரு பகுதியாக தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களின் தாயகம் தேசியம், சுய நிர்ணய உரிமையை ஒற்றை ஆட்சியின் கீழ் மண்டியிட வைப்பதற்கான முயற்சியாக சஜித்தை ஆதரித்துள்ளனர். ஏற்கனவே புதிய அரசியலமைப்புக்கான வேலைத்திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடாக தெற்கு கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய நீக்கல் செயற்பாடுகள் தொடர்பில் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல தடவைகள் மக்கள் முன் தெரிவித்திருக்கிறார். இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிகழ்ச்சி நிரல் களுக்கேற்ற வகையில் செயற்பாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களை அடி பனிய வைப்பதற்கான வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஆகவே தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசிய நீக்கத்தை மேற்கொள்வோர் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் அவர்களுக்கு தகுந்த பாடத்தை தமது வாக்குகளால் வழங்க வேண்டும் என தெரிவித்தார் |