முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா- மே. தீவுகள் இன்று மோதல் !

22.07.2022 12:45:57

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

 

இன்று (வெள்ளிக்கிழமை) ட்ரினிடெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு ஷிகர் தவானும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிக்கோலஸ் பூரானும் தலைமை தாங்கவுள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணி இறுதியாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைபற்றியது.

அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணி, இறுதியாக பங்களாதேஷ் அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் முழுமையாக இழந்தது.

இந்திய அணியை பொறுத்தவரை முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐ.பி.எல். தொடரில் பிரகாசித்த வீரர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை கடந்த கால போட்டித்தொடர்களில் விளையாடிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளும் இன்று மோதுவது 137ஆவது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 136 போட்டிகளில் இந்தியா 67இல், மேற்கிந்திய தீவுகள் 63இல் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 4 போட்டி முடிவு இல்லை.