பொங்கல் ரேஸில் செம ட்விஸ்ட்!
2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதனுடம் மற்றொரு பிரம்மாண்ட படம் போட்டிக்கு வந்துள்ளது.
தீபாவளி பண்டிகையே இன்னும் முடியவில்லை. ஆனால் அதற்குள் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் தான் பொங்கல் ரேஸில் முதல் ஆளாக களமிறங்கிய படம். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் தான் விஜய்யின் கடைசி படமாகும். இப்படம் ஜனவரி 9 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஜன நாயகன் ரிலீஸ் ஆன மறு வாரம், அதாவது ஜனவரி 14 ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் ரேஸில் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அது வேறேதுவுமில்லை பிரபாஸ் நடித்த ராஜாசாப் தான். பிரபாஸின் ஹாரர் - ஃபேன்டஸி படமான 'ராஜா சாப்'-ன் பிரம்மாண்டமான, கண்கவர் டிரெய்லர் நேற்று (29) வெளியானது.
திகிலூட்டும், ஆச்சரியமூட்டும், சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் டிரெய்லர் வந்துள்ளது. புராணக்கதைகள், த்ரில்லிங் தருணங்களுடன் ரெபல் ஸ்டார் பிரபாஸின் பான் - இந்தியன் ஹாரர் ஃபேன்டஸி த்ரில்லர் படமான 'ராஜா சாப்' ஜனவரி 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதை டிரெய்லர் உறுதி செய்துள்ளது.
பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23 ஆம் திகதி முதல் சிங்கிள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
டிரெய்லரின் சிறப்பம்சமே பிரபாஸின் இரட்டை வேடம்தான். சஞ்சய் தத்தின் வித்தியாசமான தோற்றமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரிப்பில் மாருதி இயக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் இது. 'ராஜா சாப்'-ன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹாரர், ஃபேன்டஸி, ரொமான்ஸ், காமெடி மற்றும் அசத்தலான விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர் அனைவரையும் கவர்ந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த 'கல்கி 2898 ஏ.டி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் ஒரு சூப்பர் நேச்சுரல் விஷுவல் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸுடன் சஞ்சய் தத், போமன் இரானி, செரீனா வஹாப், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மூன்று நிமிடங்களுக்கும் அதிகமான நீளமுள்ள டிரெய்லர், பிரபாஸ் தனது சினிமா வாழ்க்கையில் இதுவரை கண்டிராத ஸ்டைல் மற்றும் இரட்டை வேடத்தில் தோன்றுவதை உறுதி செய்கிறது. இது பிரபாஸின் சினிமா வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும் என தெரிகிறது.
'பிரதி ரோஜு பாண்டகே' மற்றும் 'மகாநுபாவுடு' படங்களுக்குப் பிறகு மாருதி இயக்கும் படம் 'தி ராஜா சாப்'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியன் படமாக வெளியாகும் 'ராஜா சாப்' படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரிக்கிறார்.