இருமொழிக் கொள்கை தான் த.வெ.க-வின் கொள்கை.

18.05.2026 15:26:39

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் கல்வித்துறை சார்ந்த கொள்கை நிலைப்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இருமொழிக் கொள்கை என்பது வெறும் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமானது அல்ல; அதுதான் த.வெ.க-வின் அதிகாரப்பூர்வக் கொள்கையும் கூட" என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்தார். 

தமிழகத்தின் நீண்டகால அரசியல் மற்றும் சமூக வரலாற்றோடு பிணைந்துள்ள இருமொழி கொள்கையை அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்பதை தவெக அரசு தொடர்ந்து முழுமையாக பின்பற்றும் என்பதை இதன் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் புதிய கல்வி திட்டமான 'பிஎம் ஸ்ரீ பள்ளி' திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், "மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் குறித்து எங்களது அரசு தரப்பில் ஆலோசித்து, அதன் சாதக பாதகங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தவெக அரசின் இந்த மொழி கொள்கை நிலைப்பாடு மற்றும் மத்திய அரசின் கல்வி திட்டம் குறித்த நிதானமான அணுகுமுறை தற்போது தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.