துமிந்த திசாநாயக்கவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியொன்றைக் கைப்பற்றிய சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நவம்பர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐகுல் ஷெர்காசினா என்ற கசகஸ்தான் நாட்டுப் பெண் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ளதால், இந்த வழக்கை பூர்வாங்க வழக்கு விசாரணை மாநாட்டிற்காக மீண்டும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2025 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹவ்லொக் சிட்டி குடியிருப்புத் தொகுதியில் உரிமமின்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியொன்றை வசம் வைத்திருந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.