உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் திடீர் குண்டு வீச்சு!
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனில் ஒரு பகுதியில் திடீர் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டானிட்சியா, லுகன்சா நகரில் உள்ள ஒரு கிராமத்தில் திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஒரு மழலையர் பள்ளியின் கட்டடம் முழுவதும் சேதம் அடைந்தது. ஆசிரியர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை யார் நடத்தியது? என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து பள்ளி ஊழியர் நட்டாலியா கூறியதாவது, குண்டு வெடித்த வேகத்தில் பள்ளியின் ஜன்னல்கள் சிதறின. நான் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டேன். எங்கு பார்த்தாலும், புகை மூட்டமாக இருந்ததால் என்ன நடந்ததது என முதலில் தெரியவில்லை. தாக்குதலில் பள்ளி ஊழியர்கள் சிலர் காயம் அடைந்தனர் என்று தெரிவித்தார்.
பள்ளி மீது ரஷ்ய படைகள் தான் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன. டான்பஸ் உக்ரைனின் எல்லையோர மாகாணமாகும். இதன் ஒருபகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.