கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.7½ கோடி அபராதம் வசூல் - 4 நாட்களில் மாநகராட்சி அதிரடி

20.03.2021 09:38:09

4 நாட்களில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.7½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 16-ந் தேதியில் இருந்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.3 கோடியே 68 லட்சத்து 66 ஆயிரத்து 692 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களில் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ரூ. 3 கோடியே 69 லட்சத்து 45 ஆயிரத்து 192 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 4 நாட்களில் அபராத தொகை ரூ.7½கோடியை எட்டியுள்ளது. இதுவரை ரூ.7 கோடியே 38 லட்சத்து 11 ஆயிரத்து 884 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத வசூல் நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சென்னை மாநகர போலீசார் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.