கனடா தேர்தலில் இந்திய தலையீடா?

08.04.2024 07:12:34

புதுடெல்லி: கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்தது. இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சீனா தலையீடு: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது சுமார் 11-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக சீன உளவுத் துறை பெரும் தொகையை செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு கனடா பொதுத்தேர்தலின்போது சீன தூதரகங்கள் சார்பில் பெரும் தொகை வாரியிறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கனடா அரசு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் கனடா தேர்தலில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யாவின் தலையீடும் இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கனடா பொதுத்தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவது கிடையாது. இந்த கொள்கையை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறோம்.

உண்மையைச் சொல்வதென்றால் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

கனடா அரசு நியமித்த சிறப்பு ஆணையம் வரும் மே 3-ம் தேதி தனது முதல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விரிவான அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.