ரணில் அமைக்கும் வியூகம்
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த கூட்டம் இன்றையதினம் (20.01.2025) நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில், கட்டாயம் பங்கேற்குமாறு கட்சிச் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) இடையிலான ஒன்றிணைவு தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன.
மேலும் கட்சி மறுசீரமைப்புத் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி(unp) வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, முன்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆனால் தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள்