பிரித்தானியாவை அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்!

23.10.2026 08:35:17

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வீசக்கூடும் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பலத்த வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை ஆஸ்டன் புயல்(Storm Austen) இந்த வார இறுதியில் தாக்கக்கூடும் என அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்தில் இரண்டாவது புயல் குறித்த அறிவிப்பும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை முதல் நாட்டின் வடக்கு பகுதிகளை இரண்டாவது புயலான போலோ(Storm Boelo) கடுமையாக தாக்கக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த கோடை காலத்தில் பதிவான சாதனை அளவிலான வெப்பத்தை தொடர்ந்து, இந்த பருவத்தில் உருவாகியுள்ள அடுத்தடுத்த இரண்டு புயல்கள், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதாக வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் வீசக்கூடிய காற்று பாதையால் வலுவடைந்துள்ள போலோ புயல் சனிக்கிழமை வடக்கு அயர்லாந்தில் இருந்து மேற்கு ஸ்காட்லாந்துக்கு சென்று பின்னர் கிழக்கு நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை முதல் போலோ புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமை வடக்கு அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் புயல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் 50 முதல் 65 மைல் வரை இருக்கக்கூடும் என்றும், கடலோர பகுதிகளில் 64 மைல் முதல் 80 மைல் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்டர்ன் ஜல்ஸ், ஆர்க்னி, வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்டென்(Storm Austen) என்று பெயரிடப்பட்ட புயலானது வெள்ளிக்கிழமை பிரித்தானியாவை நோக்கி வேகமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடலோர பகுதிகளில் 70 மைல் வேகத்தில் இந்த காற்றானது வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் அதே நேரத்தில், ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.