உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் திட்டம்!

08.01.2023 10:21:52

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமானது.

களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் நேற்று (08) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இக்கூட்டத்தில் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிருவாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக்கட்சியின் தலைவரினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பமானது.

கூட்டத்தில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன் குறித்த கூட்டம் தொடர்பில் சுமந்திரன் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.தற்போது அமுலில் உள்ள உள்ளுராட்சி முறைமைகளானது ஒரு குறித்த சபையில் ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவது கடினமானது என்பதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றோம். 60 வீதம் வட்டாரத்திற்கும் 40 வீதம் விகிதாசரத்திற்குமாக இருக்கின்றபோது வட்டாரத்தில் முழுமையாக வெற்றிபெற்றாலும் முழுமையாக அறுதிப்பெரும்பான்மையினை பெறுவது கஸ்டமாகும். சில அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களை போட்டியிட வைத்து சில நூறு வாக்குகளைப்பெற்று ஆசனங்களை பெற்றதன் காரணமாக வட்டாரத்துடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு உபயோகமாக இருந்திருக்கின்றது. நேற்று மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் எமது மாவட்ட கிளைகள் எட்டிலிருந்தும் கருத்துகள் பெறப்பட்டிருந்தன. சென்ற கூட்டத்தில் தீர்மானித்தன் படி ஒரு தொழில்நுட்ப ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ள மூன்று கட்சிகளும் தேர்தலிலே போட்டியிட்டால் வட்டார கிளையில் ஒரு கட்சி வெற்றி பெறும் போது விகிதாசாரத்தில் இன்னுமொரு கட்சி வெற்றி பெற முடியும். அவ்வாறு செய்யும்போது ஒட்டு மொத்தமாக சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற கூடியதாகயிருக்கும். இது இலகுவாக எண்கணிதத்திலும் அனுபவித்திலும் கண்டுகொண்ட விடயம். இன்று எல்லா மாவட்டங்களிலிருந்தும் இலங்கை தமிழரசுக்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீட்டு சின்னத்தில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடவேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் அவ்வாறே போட்டியிடுவதும் சிறந்தது என கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவராலும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்ற கருத்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எதிர்வரும் 10ஆம் திகதியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தையினை நடாத்துகின்றபோது நேற்று மத்திய குழுவில் ஏகமனதாக தெரிவிக்கப்பட்ட யோசனை முன்வைக்கப்படும். அவர்களோடு பேசி இதன் சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். இங்கு ஊடகங்களிடம் நான் விசேடமாக தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நாங்கள் எடுத்த தீர்மானம் தனித்துபோட்டியிடும் தீர்மானம் இல்லை. தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடப் போகின்றது என்று தயவுசெய்து எழுதவேண்டாம். தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் போட்டியிடுவோம் தமிழ் தேசிய கூட்டமைப்புகள் உள்ள மூன்று கட்சிகளையும் நன்மையான வகையில் உபயோகப்படுத்த முடியுமா என்றுதான் பார்க்கின்றோம். இல்லாதுபோனால் சுயேட்சைக்குழுக்களை வைத்து அந்த விகிதாசர ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையேற்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மூன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இருக்கின்ற காரணத்தினால் அந்த மூன்று கட்சிகளையும் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப்பெறலாம் என்பது அனைத்து கிளை உறுப்பினர்களின் கருத்தாகவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபட்டுவிட்டது, தமிழரசு கட்சி வெளியேறிவிட்டது என்று ஊடகங்கள் பொய்ப்பிரசாரங்களை செய்யாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பாகதான் தேர்தலை சந்திக்கும் ஆனால் தொழில்நுட்ப யுக்தியை கையாண்டு தமிழரக்கட்சியும் ஏனைய கட்சியும் தனியாக போட்டியிடும் போது சென்ற தடவை எதிர்கொண்ட சிரமங்களுக்கு முகங்கொடுக்க தேவையில்லை.