ஐரோப்பாவை வேவு பார்க்கும் ரஷ்யா!
|
ரஷ்ய இராணுவம் மற்றும் பாதுகாப்பு சேவைகளுடன் தொடர்பு கொண்ட நபர்கள், ரஷ்ய எண்ணெய் கப்பல்களில் இரகசியமாகப் பணிபுரிந்துகொண்டே, ஐரோப்பிய கடல் பகுதிகளில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 2022-ல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யா நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கப்பல்களைக் கொண்ட ஒரு ரகசிய கப்பற்படையை உருவாக்கியுள்ளது. |
|
மேற்கத்திய தடைகளையும் மீறி, இந்த கப்பல்கள் ரஷ்யாவின் பால்டிக் மற்றும் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து அதன் எண்ணெயைக் கொண்டு செல்கின்றன. இதன் மூலம் புடின் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை ஈட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரேனிய உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சமீப மாதங்களில், இந்த கப்பல்களில் சில புறப்படுவதற்குச் சற்று முன்பு கூடுதல் பணியாளர்களை அனுமதித்துள்ளன. முன்னெடுக்கப்பட்ட ரகசிய விசாரணையில், அவர்கள் ரஷ்ய குடிமக்கள் அல்ல எனது உறுதி செய்யப்பட்டாலும், அவர்களின் ஆவணங்கள், கடவுச்சீட்டு, பெயர் உள்ளிட்டவை அனைத்தும் ரஷ்ய தொடர்புடையவயாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இப்படியான கடத்தல் எண்ணெய் கப்பல்கலில் பாதுகாப்புப் பின்னணி கொண்ட ரஷ்யர்கள் சேர்க்கப்படுவது ஐரோப்பியத் தலைநகரங்களில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கசிந்துள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த நபர்களில் பலர் மோரன் செக்யூரிட்டி என்ற ஒரு இரகசியமான ரஷ்ய நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் கூலிப்படையினர். அவர்கள் இதற்கு முன்னர், பிரபலமான வாக்னர் குழு போன்ற ரஷ்யாவின் தனியார் இராணுவ ஒப்பந்த நிறுவனங்களுக்காகப் பணியாற்றியுள்ளனர். மொரான் நிறுவனம் ரஷ்ய இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புடன் தொடர்புகளைக் கொண்ட ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் என்று மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தொடர்ச்சியான கொடூரமான மற்றும் தூண்டுதலற்ற போருக்காக, ரஷ்யாவின் மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு சேவைகளை வழங்கியதற்காக, அந்த நிறுவனம் 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க கருவூலத் துறையால் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், மொரான் நிறுவனத்தின் பணியாளர்கள் ரஷ்யாவின் எண்ணெய் கடத்தல் கப்பல் தொகுப்பில் உள்ள பல எண்ணெய்க் கப்பல்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் பெரும்பாலும் கப்பலில் உள்ள ஒரே ரஷ்யர்களாக இருக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில், மோரன் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் எண்ணெய் கடத்தும் ரஷ்யாவிற்காக பணியாற்றும் ஒரு கப்பலில் இருந்து ஐரோப்பிய இராணுவத் தளங்களின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளதாக ஒரு மேற்கத்திய உளவுத்துறை ஆதாரம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இப்படியான நடவடிக்கைகள் ஐரோப்பாவில் இடையூறை ஏற்படுத்தும் என்றே பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு குறிப்பிடுகின்றனர். ரஷ்யாவின் எண்ணெய் கடத்தும் கப்பல்கள் பல டென்மார்க் மற்றும் சுவீடன் உட்பட பல நேட்டோ நாடுகளின் எல்லையின் ஊடாக கடந்து செல்வதால், அந்த நாடுகளின் அதிகாரிகள் இந்தக் கப்பல்களைக் கூர்ந்து கவனிக்கின்றனர். 2009ல் நிறுவப்பட்ட மோரன் பாதுகாப்பு குழுமம் பிரபலமான வாக்னர் கூலிப்படை மற்றும் ரஷ்யாவின் இராணுவ மற்றும் உளவுத்துறை சேவைகளுடன் விரிவான உறவுகளைக் கொண்டிருந்தது. மோரன் நிறுவனம் 2017-ல் ரஷ்யாவில் மூடப்பட்டதாகவும், பின்னர் அடுத்த ஆண்டு முன்னாள் சோவியத் குடியரசான ஜார்ஜியாவில் ஒரு அலுவலகத்தைத் திறந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், தற்போது மோரன் செக்யூரிட்டி நிறுவனம் மாஸ்கோ மற்றும் பெலிஸ் ஆகிய இரு இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |