சங்கு கூட்டணியின் செயற்குழு கூடுகிறது.
|
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவிருப்பதனால், அக்கூட்டணிக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. |
|
மாகாணசபைத்தேர்தல்கள் எந்த முறைமையின்கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அதுகுறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட 12 பேரடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது என்பது மாகாணசபைத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குப் பயந்த அரசாங்கம், அதனை உடன் நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சி மாத்திரமேயாகும் என தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதேவேளை அண்மையில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அரசாங்கம் வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவிருந்தது. இச்சந்திப்பின்போது மாகாணசபைத்தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சி குறித்தும், அதனை முறியடித்து மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படும் என இருதரப்பினதும் பிரதிநிதிகள் குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (18) வவுனியாவில் நடைபெறவுள்ள நிலையில், அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மேற்படி விடயங்கள் தொடர்பில் முதலில் கலந்துரையாடும் நோக்கில் தமிழரசுக்கட்சியுடனான சந்திப்பு பிற்போடப்பட்டதாகக் கட்சி வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது. |