ரஷ்ய ராணுவத்தில் சிக்கிக்கொண்ட இந்தியர்.

23.10.2025 14:53:54

போலியான வேலைவாய்ப்பு ஆசைகளை காட்டி ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியரின் உதவி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏப்ரல் 2025ல் கட்டுமான வேலை வாங்கி தருவதாக ஹைதராபாத்தின் கைரதாபாத்தை சேர்ந்த 38 வயது முகமது அகமது என்பவரை ரஷ்யாவுக்கு அழைத்து சென்றுள்ளது. ஆனால் அங்கு சென்ற பிறகு கைவிடப்பட்ட முகமது அகமது, அவரது விருப்பத்துக்கு மாறாக சண்டை பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட உக்ரைன் உடனான போரில் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய நிலை குறித்து ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்ட முகமது அகமது, தான் கட்டாயப்படுத்தப்பட்டு ரஷ்யா இராணுவ சார்பாக போரின் முன்வரிசையில் களமிறக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து தப்பிக் முயன்ற போது கால் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் தன்னை அங்கிருந்து விடவில்லை என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சண்டை சத்தம் பின்னணியில் கேட்க வெளியான அந்த வீடியோவில், தான் சண்டை போட மறுத்த போது தன்னை சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், தன்னுடைய படைக்குழுவில் இருந்த மற்றொரு இந்தியர் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து முகமது அகமது-வின் மனைவி அப்ஷா பேகம் தன்னுடைய கணவனை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர கோரி இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுதீன் ஓவைசியும் இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுக்கு தகவலை பகிர்ந்து உள்ளதாகவும், விரைவில் அவரை பாதுகாப்பாக நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.