பிரித்தானிய இராணுவ தளத்தில் இலங்கைத் தமிழர்கள்

20.05.2022 10:00:00

எட்டு மாதங்களாக இந்தியப் பெருங்கடலில் உள்ள இரகசிய இராணுவ தளத்தில் சிக்கித் தவிக்கும் டசின் கணக்கான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பான மூன்றாவது நாட்டில் தஞ்சம் கோர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து 7 பேர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 42 என அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

20 சிறார்கள் உள்ளிட்ட 89 இலங்கைத் தமிழர்கள் குழு ஒன்று 2021 செப்டம்பர் மாதம் தென்னிந்தியாவில் இருந்து மீன்பிடி படகு ஒன்றில் கனடாவுக்கு புலம்பெயர புறப்பட்டுள்ளனர்.

ஆனால், 11 நாட்கள் சுமார் 2,000 கி.மீ பயணத்திற்கு பின்னர் பிரித்தானிய கடற்படையால் அவர்கள் படகு இடைமறிக்கப்பட்டு, டியாகோ கார்சியா தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

2021 அக்டோபர் 3ம் திகதி முதல் பிரித்தானிய இராணுவ தளமான குறித்த தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் எவ்வளவு காலம் அங்கு இருப்பார்கள், அடுத்து எங்கு அனுப்பப்படுவார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டோம் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் உத்தரவாதம் கோருகின்றனர்.

மட்டுமின்றி, பெரும்பாலானோர் முற்றிலும் அவநம்பிக்கையான மனநிலை கொண்டுள்ளனர் எனவும், சிலர் தாங்கள் இறந்தால் தங்கள் உறுப்புகளை பிரித்தானிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, மேலும் 30 புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானிய இராணுவம் குறித்த தீவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இலங்கைத் தமிழர்களுடன் மொத்தம் 119 பேர்கள் தற்போது அந்த தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது