
"பெரியாரை யாரும் வெல்ல முடியாது"
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் (12/02/2025) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியினருக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, கனிமொழி கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். |
ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், ''வரக்கூடிய தேர்தலில் நாம் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பெற்றியிருக்கக்கூடிய உரிமைகள், நாம் புரிந்து வைத்துள்ள உண்மைகளைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல். நீதிக்கட்சி தான் நம்முடைய இயக்கத்திற்குத் துவக்கம். அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான், பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. எந்த போராட்டமும் இல்லாமல் வாக்குரிமை கிடைத்தது தமிழ்நாட்டில் தான். அதன் பிறகுதான், பல வளர்ந்த நாடுகளுக்கு கூட வாக்குரிமை கிடைத்தது. அனைவரும் சமம் என்ற திராவிட இயக்கத்தின் கருத்தியலை கொண்டது நீதிக் கட்சி. உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50% ஆட்சிப் பொறுப்பில் பங்கு பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. பெண்கள் பல தடைகளைத் தாண்டி அரசியலில் நாங்களும் பங்கு பெறுவோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்டனர். பெண்களுக்கான வளர்ச்சி என்ற ஆட்சி இருந்தால்தான், நம்முடைய முன்னேற்றம் தடை இல்லாமல் இருக்கும். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கல்லூரிக்கு சென்று படிக்கக் கூடிய மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயைப் புதுமைப் பெண் திட்டம் மூலம் தருகிறார். அதை, தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் மூலமும் மாணவர்களுக்கும் நீட்டித்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பெண் படிப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. கலைஞர் அவர்கள் திருமண உதவி திட்டத்தின் மூலம் பத்தாவது வரை படிக்கும் பெண்களுக்குத் திருமண உதவித் தொகை அளித்தார். திருமணமான பெண்கள் சமையல் அறையை விட்டு சீக்கிரம் வெளியே வர கேஸ் அடுப்பு திட்டத்தை செயல்படுத்தினார். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, நீங்கள் படித்தால் மட்டும் போதும், உங்களுடைய வளர்ச்சிக்கு ஒரு தந்தை போல முதலமைச்சர் அரணாக இருக்கிறார். புதுமைப் பெண் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வந்த முதல்வரிடம், மேடையேறி ஒரு சகோதரி, தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவிட்டனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் என்னுடைய மேல் படிப்பு என்ற கனவு நனவாகியுள்ளது என்றும், தற்போது செவிலியர் படிப்பை படிப்பதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், மகளிர் உரிமை தொகை மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெண்கள் கையில் இருக்கும் பணம். சம்பளம் பெற்ற உரிமை போல ஒரு தலைமுறைக்கு, இந்த திட்டத்தைக் கொடுத்த ஆட்சி திமுக. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாட்டால் பிளவுபடுத்தி, பிற்போக்கு சக்திகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், இங்கே இருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளும் தந்தை பெரியாரைப் பற்றிப் படியுங்கள். பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தைத் தாண்டி பெண் விடுதலை பற்றி யாரும் சொன்னது இல்லை. எது உனக்குத் தடையாக இருந்தாலும், தூக்கியெறி. உன்னுடைய கனவுகள், லட்சியங்கள், வாழ்க்கை தான் முக்கியம் என்று சொன்ன மிகப்பெரிய தலைவர் தான் பெரியார். அவரை கொச்சைப்படுத்தக் கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய நிலைமையை நாம் பார்க்கிறோம். நான் ஒன்றைச் சொல்கிறேன், பெரியாரை யாரும் வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது. சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உடைய ஒவ்வொரு பெண்கள் மனதிலும் பெரியார் வாழ்கிறார். இந்த மண்ணில், ஜாதி, மதம் என்ற வேறுபாடு இல்லாமல் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனின் மனதிலும் பெரியார் வாழ்கிறார், வாழ்வார். இதுதான், திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை. திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு வளர்ந்து கொண்டு இருக்கிறது. பிற்போக்குத் தனத்தைக் கொண்டு வந்து சேர்க்க முடியதா மாநிலம் தமிழ்நாடு. ஒன்றிய பட்ஜெட்டில் திருக்குறள் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு சொன்ன விஷயம். குமரி எல்லையில் ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை வைத்தவர் கலைஞர். இன்றைக்கு, விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் கண்ணாடி பாலம் கட்டிக்கொடுத்தவர் முதலமைச்சர். ஒரு சில நேரங்களில், விவேகானந்தர் பாறைக்குப் போகும்போது படகு வேலை செய்யும். ஆனால், திருவள்ளுவர் சிலைக்குப் போகும்போது வேலை செய்யாது. தற்போது, கண்ணாடி பாலம் மூலம் இரு இடங்களுக்கும் செல்ல முடியும் என்று முதலமைச்சர் செய்துகொடுத்தார். ஒன்றிய பட்ஜெட்டில், தமிழ்நாடு என்கிற பெயர் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் பற்றி நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். அதற்கு, பதில் அளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேவை அதிகரிக்கும் போது அதற்கான பணத்தைத் தருவோம் (Demand Driven). கடந்த இரண்டு வருடங்களாக, குறைந்த பணத்தை தான் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தருகின்றனர். எப்படி, மாநில அரசுகள் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு சம்பளம் தரமுடியும். கிட்டத்தட்ட 84 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்தின் பட்டியலில் இருந்து பெயர்கள் அகற்றுப்பட்டுவிட்டன. இதுதான், ஒன்றிய அரசின் மிகப் பெரிய சாதனை. 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவந்த நோக்கம் என்பது சாதாரண சாமானிய மக்களுக்குகான திட்டம். கடந்த மாதம், நானும் மற்றும் நம்முடைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு நிதியை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், தற்போது வரைக்கும் பணம் வரவில்லை. நம்மிடம் இருந்து வரி வாங்கிக்கொண்டு, நமது பிள்ளைகள் கல்விக்காகத் தரவேண்டிய ரூ. 2,000 கோடிக்கு மேல், நாம் ஹிந்தி படிக்க ஒத்துக் கொள்ளவில்லை என்று சொன்ன ஒற்றை காரணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்திற்குப் பணத்தை தருவதில்லை. பணத்தைக் குறைத்துக் குறைத்து, அந்த திட்டத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது தான் ஒன்றிய அரசின் எண்ணம். நம்மிடம் இருந்து ஜி.எஸ்.டி மூலம் வரி பெற்றுக்கொண்டு, உத்தரப்பிரதேச மாநிலத்திற்குப் பலமடங்கு நிதியைத் தருகிறார்கள். ஆனால், நமிழ்நாட்டில் இருந்து 1 ரூபாய் வாங்கிக்கொண்டு, 29 பைசா கூட சரியாகத் தருவதில்லை. தொடர்ந்து, ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்துகொண்டு இருக்கின்றது. நம்முடைய முதலமைச்சர், தான் முதமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினர், மக்களும் தொடர்ந்து போராடினார்கள். நாடாளுமன்றத்தில் அந்த திட்டத்தை கொண்டுவந்தபோது, அதிமுக ஆதரித்தது. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், எப்போதும் தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய, யாராக இருந்தாலும் எதிர்க்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். கலைஞர் சொன்னது போல, உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற அந்த வழியில் நிற்கக்கூடிய ஆட்சி திமுக. ஒன்றிய அரசு பணத்தை வைத்துக் கொண்டு மாநில அரசை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதையும் தாண்டி, நம்முடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. மேலும், இந்த திட்டங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உள்ளது. வரக்கூடிய தேர்தலில் நாம் கடுமையாக பணியாற்றிட வேண்டும். அப்படி செய்தால்தான் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில், உழைக்கக்கூடிய மகளிருக்குப் போட்டியிட நான் போராட முடியும். நீங்கள் நேரடியாக மக்களிடம் செல்லுங்கள், அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து உதவி செய்யுங்கள். நமக்குக் கிடைத்த திட்டங்களைப் பற்றி மக்களுடன் சொல்லுங்க''ள் என்று பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன் கௌதம் சிகாமணி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப. ராணி, திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர் சேலம் சுஜாதா, திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர் ராணி ரவிச்சந்திரன் திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர் மாலதி நாராயணசாமி, திமுக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் அ.ரியா, திமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். |