புதிய சட்ட மூலம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட காலத்திற்குப் பேண முடியாது எனவும் எனவே வங்குரோத்தான வர்த்தகங்களை கையாள புதிய சட்டமூலமொன்று கொண்டுவரப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பினால் நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கையில் உள்ள நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீர்மானமிக்க முயற்சி’ என்ற வேலைத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, இலங்கை நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் சம்மேளனத்தின் தலைவர் சசிகா டி சில்வா ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
முதன்முறையாக, சாதாரண மக்களுக்கு உரிமைகளை வழங்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். இவற்றில் விவசாய நிலங்களும் உள்ளன. ஆனால் விவசாய கிராமங்களிலேயே வறுமை நிலவுகிறது. அதற்குத் தீர்வாகவே விவசாய நவீனமயமாக்கலை கிராமத்திற்கு கொண்டு செல்கிறோம். இதன் மூலம் கிராமப் புறங்களில் பணப் புழக்கம் அதிகரிக்கிறது. உரிமையும் உறுதி செய்யப்படும். வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனி நபர் பணப் பெறுமதி அதிகரிக்கும். இந்த முயற்சிகளுக்கு இணையாக சிறு, நடுத்தர வர்த்தகர்களுடன் முன்னேற்றத்திற்கும் வழி ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகும். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போது பராட்டே சட்டத்தை இடை நிறுத்தியுள்ளோம். ஆனால் அதை தொடர்ச்சியாக செய்ய முடியாது. எனவே, வங்குரோத்து நிலை குறித்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளோம். அது தொடர்பாக விவாதிப்பதற்கான பிரதிகளையும் வழங்க முடியும். முதலில் அதைப் பற்றி ஆய்வு செய்யுங்கள். மறுசீரமைப்பு தொடர்பிலான சில விடயங்களும் இதற்குள் காணப்படுகிறன என்றார்.