பிரபல நடிகையை படம் பிடித்த மர்மநபர்

13.05.2022 09:22:52

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் ராணா. இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ.வாக உள்ளார். நடிகை நவ்னீத் ராணாவும், அவரது கணவர் ரவி ராணாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் மந்திரம் ஓத முயன்றனர்.

 

இதுதொடர்பாக நவ்னீத் ராணா, அவரது கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 12 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் எடுத்தபோது மர்மநபர் ஒருவர் நடிகை நவ்னீத் ராணாவை படம் பிடித்தார். இதுதொடர்பாக நவ்னீத் ராணா மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். மருத்துவமனையில் பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் அந்த மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.