
பற்றி எரியும் காட்டுத் தீ.
கனடாவில் சஸ்காட்சிவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் சஸ்காட்சிவான் (Saskatchewan) மற்றும் மனிடோபா (Manitoba) மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் காட்டுத் தீயானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக 160க்கும் மேற்பட்ட இடங்களில் இக் காட்டுத்தீ பரவிவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக, அப் பகுதிகளில் நேற்று அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் சுமார் 17,000 மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை இக்காட்டுத் தீயினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் ,இலட்சக்கணக்கான உடமைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு சஸ்காட்சிவான் மாநில முதலமைச்சர் ஸ்கோட் மோ (Scott Moe) வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் இக்காட்டுத் தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளமையால் அப்பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாகக் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது இப் புகை மண்டலம் தற்போது அமெரிக்காவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மில்வாக்கீ (Milwaukee), சிகாகோ (Chicago), மற்றும் டிட்டோரைட் (Detroit) போன்ற நகரங்களில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளமையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.