’தமிழர்களின் தங்கம் இராணுவத்திடம் இல்லை’.

24.06.2026 09:02:00

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்க நகைகளைக் கைப்பற்றவில்லை எனத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம்  3 மாதங்களில் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார். 

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் எழுப்பியிருந்த கேள்விக்கு பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற அமர்வில்,  பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்க நகைகளைக் கைப்பற்றவில்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விடுதலைப் புலிகளின் களஞ்சியங்களிலிருந்து சுமார் 150 கிலோ பெறுமதியான தங்க நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. இந்த நகைகளின் உரிமையாளர்கள் குறித்த எந்தத் தகவலும் இராணுவத்திடம் இல்லை.

இந்த நகைகள் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு, தங்க ஆபரணங்கள் அதிகார சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கமைய, ஆரம்பக்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்னும் 3 மாத காலத்திற்குள் குறித்த தங்க நகைகளை நீதிமன்றத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியாக உரிமை கொண்டாடுபவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

கடந்த 2014-ஆம் ஆண்டு, தங்களுடைய அடையாளங்கள் மற்றும் ஆவணங்களைச் சரியாக உறுதிப்படுத்திய 2,015 பேருக்குத் தங்க நகைகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன. தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்குத் தொடர்ந்தும் நகைகள் வழங்கப்படும்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரங்களிலோ எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.