ஈரானிய தூதரக அதிகாரிகளுடன் இன்று பேச்சு!

09.03.2026 14:46:25

இலங்கையின் பொறுப்பில் உள்ள ஈரான் கடற்படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசாங்க அதிகாரிகளுக்கும் இலங்கையிலுள்ள ஈரான் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (09) நடைபெறவுள்ளது.

தூதரக அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்தச் சந்திப்பின் பின்னரே, ஈரான் கடற்படையினர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, தெரிவித்தார்.

இலங்கைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 கடற்படையினரும், IRIS Bushehr கப்பலில் இருந்த 204 கடற்படையினரும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தப் படைவீரர்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து பலரது அவதானம் திரும்பியுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நேற்று (08) கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஈரான் கடற்படையினருக்கு ஒரு மாத கால அவகாச விசா வழங்கி, மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.