220 லட்சம் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்தும்?
|
சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை பலப்படுத்த முடியாமல் இருக்கும் அரசாங்கம், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் 220 லட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த போகிறது. நீதி அமைச்சர் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறி இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
|
|
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை அசம்பாவிதம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி, எதிர்க்கட்சியில் இருந்த சமயம் பிரஸ்தாபித்தார். இருப்பினும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்ததை இந்த அரசாங்கம் தடுக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, 27 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் நூறு பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் கொள்கை பிரகடன புத்தகமான வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற புத்தகத்தில் சிறைச்சாலைகள் தொடர்பாகவும் சிறைக்கைதிகளை எவ்வாறு வழிநடத்துவது என தெரிவித்திருக்கிறது. அதன் பிரகாரம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என கேட்கிறேன். புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்கள். ஆனால் நீர்கொழும்பு சம்பவத்தின் மூலம் எந்த மாற்றமும் இதவரை இடம்பெறவில்லை. பழைய முறைமையே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது. அதேநேரம் சிறைச்சாலைகளில் நெருக்கடியான நிலையே இருந்து வருகிறது. அங்கு கைதிகள் தங்கவைக்கப்பட வேண்டிய எண்ணிக்கைக்கும் அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் சிறைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதனால் இதுதொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார் என கேட்கிறோம். சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் வெலிக்கடை , மஹர போன்ற சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து அமைச்சர் இன்னும் பாடம் கற்றுக்கொள்ள தவறி இருக்கிறார். அத்துடன் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமித்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. மேலும் சிறைச்சாலையில் பாரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அங்குள்ள நிலைமை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்வகையில், புலனாய்வு தகவல்கள் அவருக்கு கிடைப்பதில்லையா? அதனால்தான் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் கேட்கப்பட்டபோது சமுகவலைத்தளங்களை பார்க்க முடியாமல் போனதாக தெரிவித்தீர்களா என கேட்கிறோம். இன்று நீதித்துறையில் பல பிரச்சனைகள் காணப்படும் நிலையில், நீதி அமைச்சர் இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்காமல், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தலையீடுகளைச் செய்து வருவதனைக் காண முடியுமாக இருக்கின்றது. எனவே சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை பலப்படுத்த முடியாமல் இருக்கும் நீங்கள், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் 220 லட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்ங்வாறு உறுதிப்படுத்த போகிறீர்கள். அதனால் நீதி அமைச்சர் சமூகவலைத்தளம் ஊடாக சிறைச்சாலைகளை நிர்வகிக்க முற்பட்டதாலே நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் பாரதூரமான நிலைக்கு சென்றது. அதனால் நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அந்த தீர்மானத்தை எடுப்பதா இல்லையா என நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்றார். |