’சம்பள முரண்பாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை’
அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசபந்து லெஸ்லி தேவேந்திரவின் தொழிற்சங்க பணிகளுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொருளாதார ரீதியில் இப்போது நாம் எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளோம். நாம் நடக்க வேண்டும். இந்த ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தனியார் துறையிலும் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வருடம் அதிக நிவாரணங்களை வழங்குவதற்கான பொருளாதார பலம் எம்மிடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும். இதற்காக அரச துறையின் அனைத்து துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளோம்.
அதற்கிணங்க தற்போது அந்த குழுவிற்குப் பொருத்தமானவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது கடினமான பயணம். கடந்த பொருளாதார நெருக்கடியினால் இந்நாட்டின் பொது மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செல்ல வேண்டும் என்றார்.