எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் தமிழக சட்டசபை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையை உடனடியாக கூட்ட வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, கேரள சட்டமன்றத்திலும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சாலைகளிலேயே சமைத்து, அதை உண்டு, கடந்த 37 நாட்களாகத் தொடர்ந்து இரவும் பகலுமாக, பல லட்சக்கணக்கான விவசாயப் பெருமக்கள் டெல்லி தலைநகரில், திடமான - தீர்மான சிந்தையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.