முதல் ரி-20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி !
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
பிரிஸ்டோல் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 90 ஓட்டங்களையும் மொயின் அலி 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 5 விக்கெட்டுகளையும் பெலுக்வாயோ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 235 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஸ்டன் ஸ்டுப்ஸ் 72 ஓட்டங்களையும் ரீஸா ஹென்ரிக்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரிச்சட் க்ளீஸன் 3 விக்கெட்டுகளையும் ரீஸ் டொப்லே மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொயின் அலி 1 விக்கெட்டினையும் வீழத்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 52 ஓட்டங்களையும், 1 விக்கெட்டினையும் வீழ்த்திய மொயின் அலி தெரிவுசெய்யப்பட்டார்.