தொடரிலிருந்து விலகினார் டெம்பா பவுமா!

03.09.2021 14:17:22

தென் ஆபிரி்க்க அணித்தலைவர் டெம்பா பவுமா இலங்கையுடனான தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது, அவரது பெருவிரலில் உபாதை ஏற்பட்டிருந்தது.

இப்போட்டின் 26 ஆவது ஓவர் வீசப்பட்டுக்கொண்டிருந்தபோது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த, இலங்கை வீரர் விக்கெட்டை நோக்கி பந்தை வீசியிருந்தார்.

தன்னை நோக்கிவந்த பந்தை தடுக்க முயன்றபோது வலது கையின் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் இலங்கையுடனான ஒட்டுமொத்த தொடரிலிருந்து விலகுவதுடன் மீண்டும் தென் ஆபிரிக்கா பயணமாகவுள்ளார்.

இந்நிலையில், இலங்கையுடனான எதிர்வரும் போட்டிகளில் தென் ஆபிரிக்க அணித்தலைவராக கேஷவ் மஹாராஜ் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய முதலாவது போட்டியில் 14 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா அணி தோல்வியை தழுவியிருந்த நிலையில், 1-0 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.