மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும்!

24.10.2026 10:52:23

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச் சபை கரிசனை வெளியிட்டுள்ளது.

  

 

அண்மையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுடன் ஒப்பிடுகையில், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் சில முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ள போதிலும், நீண்டகால ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படுகின்ற இச்சட்டமூலத்திலும் 'பயங்கரவாதம்' என்பதற்கு மிகப் பரந்துபட்டதும், தெளிவற்றதுமான வரைவிலக்கணமே வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையான விளக்கங்களுக்கும், அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள், போராட்டங்கள் மற்றும் சிவில் செயற்பாடுகளைக் குற்றமாக்குவதற்கும் வழிகோலும் சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், எதிர்பார்ப்பாளர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஆழமான மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அச்சட்டத்துக்கான பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது கடந்தகால துஷ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டுமேயன்றி, அதிகாரிகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்கான புதிய ஆயுதமாக அமையக்கூடாது.

இலங்கையில் இவ்வாறான சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வரலாற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இச்சட்டத்தில் வலுவானதும் யதார்த்தபூர்வமானதுமான பாதுகாப்பு நடைமுறைகள் உள்வாங்கப்படுவது இன்றியமையாததாகும். இருப்பினும் இச்சட்டமூலத்தில் அவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் போதியளவு அவதானம் செலுத்தப்படாமை கரிசனைக்குரிய விடயமாகும்.

அதேவேளை இச்சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பரந்துபட்ட வரைவிலக்கணத்துக்கு மேலதிகமாக, நபரொருவரை குற்றச்சாட்டுக்களின்றி ஒரு வருடம் வரையிலும், அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு முன்னர் ஒரு வருடம் வரையிலும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு இச்சட்டமூலம் இடமளிக்கின்றது. இது பலவந்தமான தடுப்புக்காவலில் இருந்து விடுபடுவதற்கான உரிமை, குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாகவே கருதப்படவேண்டும் என்ற நியதி மற்றும் நியாயமான காலத்துக்குள் வழக்கு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கான உரிமை என்பவற்றை மீறுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறும், அதனை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப திருத்தியமைக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதுவரை பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.