அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி...

17.12.2022 11:01:07

இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரனை கிரிக்கெட் விஞ்ஞானி என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணிக்காக 87வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் அஸ்வின், இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். அதேபோல் 13 அரை சதங்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில் 442 விக்கெட்டுகளும்,

பேட்டிங்கில் சுமார் 3 ஆயிரம் ரன்களும் குவித்துள்ளார். இதனால் டெஸ்ட் கிரிகெட்டை பொறுத்தவரை, அஸ்வின் ஆல் ரவுண்டராகவே அறியப்படுகிறார். வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 113 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் 8வது விக்கெட்டிற்கு குல்தீப் யாதவுடன் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அஸ்வின். இதன் மூலம் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

இதனால் அஸ்வினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஸ்வின் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்:- ரவிச்சந்திரன் அஸ்வின் டெய்லண்டர் அல்ல. அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் விளாசியுள்ளார். அஸ்வின் போல் கீழ்நிலையில் உள்ள வீரர்கள் ரன்கள் சேர்க்கும் போது எதிரணியினருக்கு கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தும். பேட்டிங்கில் உழைக்கக் கூடியவர்.

அதனை அஸ்வின் மிகச்சிறப்பாக செய்து வருகிறார். இளம் வயதிலேயே ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான கடினமான சூழல்களில் ரன்கள் சேர்த்துள்ளார். மிகவும் கடினமான ஷாட்களை, மிக எளிதாக விளையாட கூடியவர். ஒவ்வொரு ரன்னுக்காக உழைக்கக் கூடியவர். ஸ்பின்னர்களை எளிதாக விளாசிவிட்டு, வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திட்டத்துடன் இருப்பவர். பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

இப்போதும் சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். என்னை பொறுத்தவரை, அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி. ஏனென்றால், ஒவ்வொரு முறையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்து கொண்டே இருப்பார். புதிய முயற்சிகளை மேற்கொள்வார். இவ்வாறு கார்த்திக் கூறினார்.