ரூ.5 லட்சம் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு - புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

16.06.2021 09:59:26

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை கலெக்டர்கள் தயார் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடுத்தர வயதை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் ஏற்பட்ட இதுபோன்ற உயிரிழப்புகளால் பல குடும்பங்களில் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள்.

இதுபோன்ற பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் முன் வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்...ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு


இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம், வைப்பு தொகை நிலுவையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும் இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிவாரண உதவிகள் தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்படி தமிழக அரசு வழங்கும் ரூ.5 லட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும்.
 

குழந்தைகளின் 18 வயது வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவு அடைந்தவுடன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வட்டியுடன் அந்த பணம் கிடைக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.